Tuesday, 12 March 2024

ஒளவை (அகத்தில்சூடி) ,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது,களவழி நாற்பது, முதுமொழிக் காஞ்சி

 ஔவையார் நூல்கள்:

1. ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.

2. ஆறுவது சினம்.

3. இயல்வது கரவேல்.

4. ஈவது விலக்கேல்.

5. உடையது விளம்பேல்.

6. ஊக்கமது கைவிடேல்.

7. எண் எழுத்து இகழேல்.

8. ஏற்பது இகழ்ச்சி.

9. ஐயம் இட்டு உண்.

10. ஒப்புரவு ஒழுகு.

11. ஓதுவது ஒழியேல்.

12. ஔவியம் பேசேல்.

13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.

15. ஙப் போல் வளை.

16. சனி நீராடு.

17. ஞயம்பட உரை.

18. இடம்பட வீடு எடேல்.

19. இணக்கம் அறிந்து இணங்கு.

20. தந்தை தாய்ப் பேண்.

21. நன்றி மறவேல்.

22. பருவத்தே பயிர் செய்.

23. மண் பறித்து உண்ணேல்.

24. இயல்பு அலாதன செய்யேல்.

25. அரவம் ஆட்டேல்.

26. இலவம் பஞ்சில் துயில்.

27. வஞ்சகம் பேசேல்.

28. அழகு அலாதன செய்யேல்.

29. இளமையில் கல்.

30. அரனை மறவேல்.

31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்

32. கடிவது மற.

33. காப்பது விரதம்.

34. கிழமைப்பட வாழ்.

35. கீழ்மை அகற்று.

36. குணமது கைவிடேல்.

37. கூடிப் பிரியேல்.

38. கெடுப்பது ஒழி.

39. கேள்வி முயல்.

40. கைவினை கரவேல்.

41. கொள்ளை விரும்பேல்.

42. கோதாட்டு ஒழி.

43. கௌவை அகற்று.

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்.

45. சான்றோர் இனத்து இரு.

46. சித்திரம் பேசேல்.

47. சீர்மை மறவேல்.

48. சுளிக்கச் சொல்லேல்.

49. சூது விரும்பேல்.

50. செய்வன திருந்தச் செய்.

51. சேரிடம் அறிந்து சேர்.

52. சையெனத் திரியேல்.

53. சொற் சோர்வு படேல்.

54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி.

56. தானமது விரும்பு.

57. திருமாலுக்கு அடிமை செய்.

58. தீவினை அகற்று.

59. துன்பத்திற்கு இடம் கொடேல்.

60. தூக்கி வினை செய்.

61. தெய்வம் இகழேல்.

62. தேசத்தோடு ஒட்டி வாழ்.

63. தையல் சொல் கேளேல்.

64. தொன்மை மறவேல்.

65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி.

67. நாடு ஒப்பன செய்.

68. நிலையில் பிரியேல்.

69. நீர் விளையாடேல்.

70. நுண்மை நுகரேல்.

71. நூல் பல கல்.

72. நெற்பயிர் விளைவு செய்.

73. நேர்பட ஒழுகு.

74. நைவினை நணுகேல்.

75. நொய்ய உரையேல்.

76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்.

78. பாம்பொடு பழகேல்.

79. பிழைபடச் சொல்லேல்.

80. பீடு பெற நில்.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.

82. பூமி திருத்தி உண்.

83. பெரியாரைத் துணைக் கொள்.

84. பேதைமை அகற்று.

85. பையலோடு இணங்கேல்.

86. பொருள்தனைப் போற்றி வாழ்.

87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்.

89. மாற்றானுக்கு இடம் கொடேல்.

90. மிகைபடச் சொல்லேல்.

91. மீதூண் விரும்பேல்.

92. முனைமுகத்து நில்லேல்.

93. மூர்க்கரோடு இணங்கேல்.

94. மெல்லி நல்லாள் தோள்சேர்.

95. மேன்மக்கள் சொல் கேள்.

96. மை விழியார் மனை அகல்.

97. மொழிவது அற மொழி.

98. மோகத்தை முனி.


வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்.

100. வாது முற்கூறேல்.

101. வித்தை விரும்பு.

102. வீடு பெற நில்.

103. உத்தமனாய் இரு.

104. ஊருடன் கூடி வாழ்.

105. வெட்டெனப் பேசேல்.

106. வேண்டி வினை செயேல்.

107. வைகறைத் துயில் எழு.

108. ஒன்னாரைத் தேறேல்.

109. ஓரம் சொல்லேல்.

2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.

4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.

8. ஏவா மக்கள் மூவா மருந்து.

9. ஐயம் புகினும் செய்வன செய்.

10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.

15. காவல்தானே பாவையர்க்கு அழகு.

16. கிட்டாதாயின் வெட்டென மற.

17. கீழோர் ஆயினும் தாழ உரை.

18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.

22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.

23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.

24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.

25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.

27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.

28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.

29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.

30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.

31. சூதும் வாதும் வேதனை செய்யும்.

32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.

34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

40. தீராக் கோபம் போராய் முடியும்.

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.

42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.

43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.

46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.

47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்

48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.

49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.

50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.

51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.

52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.

53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.

54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.

55. நேரா நோன்பு சீராகாது.

56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.

57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.

58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.


பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.

60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.

61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.

62. பீரம் பேணி பாரம் தாங்கும்.

63. புலையும் கொலையும் களவும் தவிர்.

64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.

65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.

67. பையச் சென்றால் வையம் தாங்கும்.

68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.

69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

71. மாரி அல்லது காரியம் இல்லை.

72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.

77. மேழிச் செல்வம் கோழை படாது.

78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.

80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.

83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.

84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.

88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.

89. வைகல் தோறும் தெய்வம் தொழு.

90. ஒத்த இடத்து நித்திரை கொள்.

91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.


3. மூதுரை

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கோல் என வேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.       1


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர்.       2


இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும்-இன்னாத

நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே

ஆளில்லா மங்கைக் கழகு.      3


அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.      4


அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா .      5


உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்

பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்.      6


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகுமாம் குணம் .      7


நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.      8


தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது.      9


நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.      10


பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம் செயல்.      11


மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்

உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது

மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும்.      12


கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே

நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன்மரம்.      13


கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி.      14


வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்.      15


அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.      16


அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.      17


சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)

அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய

பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக் கால்.      18


ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி - தோழி

நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்

விதியின் பயனே பயன்.      19


உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு.      20


இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்.      21


எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே

கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முற்பவத்தில் செய்த வினை.      22


கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீர்ஒழுகு சான்றோர் சினம்.      23


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்

கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா

மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்.      24


நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர்.      25


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு.      26


கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்

அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய

வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே

இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.      27


சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்

கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்

தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்

மனம்சிறியர் ஆவரோ மற்று.      28


மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை

ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து

போம்போ(து) அவளோடு (ம்) போம்.      29


சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.      30


4. நல்வழி


கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்

துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா


நூல்

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்

தீதொழிய நன்மை செயல்.      1


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ள படி.      2


இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே

இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.      3


எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது

புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்

மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே

ஆங்காலம் ஆகும் அவர்க்கு.      4


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.      5


உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்

கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்

கடலோடி மீண்டும் கரையேறினால் என்

உடலோடு வாழும் உயிர்க்கு.      6


எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்

அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்

பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.      7


ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்

கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்

மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்.      8


ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)

ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு

நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து .      9


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!

நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்

எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்      11


ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்

என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அறிது.      11


ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு,      12


ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்

சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்

ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்

மெய்அம் புவியதன் மேல்.      13


பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்

இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர்விடுகை சால உறும்.      14


சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்

இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்.      15


தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்

கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை

கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி.      16


செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இருநிதியம்?- வையத்து

"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று

வெறும்பானை பொங்குமோ மேல்?      17


பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்

உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்

இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம்.      18


சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்.      19


அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்

கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை

மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி

வெறுமைக்கு வித்தாய் விடும்.      20


நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்

பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்

வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்

தரும்சிவந்த தாமரையாள் தான்.      21


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)

ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.      22


வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமே - மூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை.      23


நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்

ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்

உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே

மடக்கொடி இல்லா மனை.      24


ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.      25


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்.      26


ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்.      27


உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்.      28


மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்

கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத் தவர்.      29


தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்

பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே

ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா

வெறுத்தாலும் போமோ விதி .      30


இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய

வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்

தாரத்தின் நன்று தனி.      31


ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்

மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக

உண்ணீர்மை வீறும் உயர்ந்து.      32


வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்

பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.      33


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்

எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை

இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்

செல்லா(து) அவன்வாயிற் சொல்.      34


பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்

ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா

விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு

உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.      35


நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்

கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ

போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்

மாதர்மேல் வைப்பார் மனம்.      36


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்

கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே

விண்ணுறுவார்க் கில்லை விதி.      37


நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்

அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை

தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்

போனவா தேடும் பொருள்.      38


முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்

தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்

கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்

முலையளவே ஆகுமாம் மூப்பு.      39


தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்.      40

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -II

ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார் ),

 ஐந்திணை எழுபது (மூவாதியார் )

திணை மொழி ஐம்பது (கண்ணன் சேந்தனார்) & இன்னிலை (பொய்கையார்)


1. மாறன் பொறையனார் அருளிய ஐந்திணை ஐம்பது

(காலம் - கி. பி. நான்காம் நூற்றாண்டு)

பாயிரம்

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய

வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்

செந்தமிழ் சேரா தவர்.


முல்லை

இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்

ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.


மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து

செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்

இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ

மயங்கி வலனேருங் கார்.       1


அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி

மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி !

கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்

பீர்நீர்மை கொண்டன தோள்.       2


மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன

கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை

முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று

நமர்சென்ற நாட்டுள்இக் கார்.       3


உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்

வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி

நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்

கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார்.       4


கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்

கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடி

வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்

துளிகலந்து வீழ்தருங் கண்.       5


முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி

செல்சார் வுடையார்க் கினியவாய் - நல்லாய்மற்(று)

யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை

ஈரும் இருள்மாலை வந்து.       6


தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை

ஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்

சிறுகுழல ஓசை செறிதொடி! வேல்கொண்(டு)

எறிவது போலும் எனக்கு.       7


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி

பொருந்தினர் மேனிபோல் பொற்பத் - திருந்திழாய

வானம் பொழியவும் வாரார்கொல் இன்னா

கானம் கடந்துசென் றார்.       8


வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு)

உருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேல்

பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு) ஈன்றன

வம்ப மறையுறக் கேட்டு.       9


நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக

தேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் - தான்நவின்ற

கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி

நிற்பாள் நிலையுணர்கம் யாம்.       10


2. குறிஞ்சி

இடம் - மலையும் மலை சார்ந்த இடமும்

ஒழுக்கம் - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்


பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்

நன்மலை நாடன் நலம்புனைய -மென்முலையாய்

போயின சின்னாள் புனத்து மறையினால்

ஏயினார் இன்றி இனிது.       11


மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல்

காவல் இயற்கை ஒழிந்தேம்எம் - தூஅருவி

பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும்

பாக்கம் இதுஎம் இடம்.       12


கானக நாடன் கலவான்என் தோளென்று

மானமர் கண்ணாய்! மயங்கல்நீ - நானம்

கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்

புலம்பும் அகன்றுநில் லா.       13


புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்

தினைகாத் திரும்தேம்யாம் ஆக - வினைவாய்த்து

மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்

தாம்வினவ லுற்றதொன் றுண்டு.       14


வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து

மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) - ஆங்(கு) எனைத்தும்

பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்

சேந்தனவாம் சேயரிக்கண் தாம்.       15


கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டு

மடிசெவி வேழம் இரீஇ - அடியோசை

அஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள்

துஞ்சா சுடர்த்தொடி கண்.       16


மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட !

எஞ்சாது நீவருதி யென்றெண்ணி - அஞ்சித்

திருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர்

உருஒடுங்கும் உள்ளுருகி நின்று.       17


எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல்

மறந்தும் கிளியனமும் வாரா - கறங்கருவி

மாமலை நாட! மடமொழி தன்கேண்மை

நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு.       18


நெடுமலை நன்னாட! நீள்வேல் துணையாக

கடுவிசை வாலருவி நீந்தி - நடுஇருள்

இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள்

என்னாவாள் என்னும்என் நெஞ்சு.       19


வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்ட(து)

அறியான்மற்(று) அன்னோ! அணங்(கு) அணங்கிற்(று) என்று

மறிஈர்த்(து) உதிரம்தூய் வேலன் தரீஇ

வெறியோ(டு) அலம்வரும் யாய்.       20


3. மருதம்

இடம் - வயலும் வயல் சார்ந்த இடமும்

ஒழுக்கம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்


கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி

நுண்துளைத் துன்னூ விற்பாரின் - ஒன்றானும்

வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத்

தேற எமக்குரைப்பாய் நீ.       21


போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத்

தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்

அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள் என்செய்ய வந்தாய்

நெறிஅதுகாண் எங்கையர் இற்கு.       22


யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்

பாண! பரிந்துரைக்க வேண்டுமோ - மாண

அறிவ(து) அறியும் அறிவினார் கேண்மை

நெறியே உரையாதோ மற்று.       23


கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளை

நீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு - மேல்எலாம்

சார்தற்குச் சந்தனச்சாந்(து) ஆயினேம் இப்பருவம்

காரத்தின் வெய்யஎம் தோள்.       24


அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்

விழைதரு மார்பம் உறுநோய் - விழையின்

குழலும் குடுமிஎன் பாலகன் கூறும்

மழலைவாய் கட்டுரை யால்.       25


பெய்வளைக் கையாய்! பெருநகை ஆகின்ற

செய்வய லூரன் வதுவை விழ(வு)இயம்பக்

கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன்

எய்தி இடருற்ற வாறு.       26


தணவயல் ஊரன் புலக்கும் தகையமோ

நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல்

வெண்மரல் போல நிறந்திரிந்து வேறாய

வண்ணம் உடையேம்மற்(று) யாம்.       27


ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு

வல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் - நில்லென்னா(து)

ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும்

நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு.       28


ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம்

புல்லேன்யான் என்பேன் புனையிழையாய்! - புல்லேன்

எனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன்

தனக்(கு)ஏவல் செய்தொழுகு வேன்.       29


குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்

வளியெறியின் மெய்யிற்(கு) இனிதாம் - ஒளியிழாய் !

ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி

கூடல் இனிதாம் எனக்கு.       30


4. பாலை

இடம் - குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி

(நீர்வற்றிய இடம்)

ஒழுக்கம் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்


உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்

எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்(கு)

இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்

துன்பம் கலந்தழியும் நெஞ்சு.       31


விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர்

அழற்பட்(டு) அசைந்த பிடியை - எழிற்களிறு

கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்(டு)

உச்சி ஒழுக்கஞ் சுரம்.       32


பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்

ஆயமும் ஒன்றும் இவைநினையாள் - பால்போலும்

ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்

காய்ந்து கதிர்தெறூஉங் காடு.       33


கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்

ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி

வேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர்

வாள்தடங்கண் மாதரை நீத்து.       34


கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த

தடிநிணம் மாந்திய பேஎய் - நடுகல்

விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர்

பொருள்புரிந்தார் போய சுரம்.       35


கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப்

பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும்

வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய்

தொடியோடி வீழத் துறந்து.       36


தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்

வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது

கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்

வல்லவோ மாதர் நடை.       37


சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி.       38


மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோ டப்

புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்து

விம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ

நம்மில் பிரிந்த இடத்து.       39


இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா

நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம்

குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்

என்கொலே சேக்கும் இடம்.       40


5. நெய்தல்

இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்

ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.


தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)

ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த

சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ

பூந்தலை அன்றில் புலம்பு.       41


கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்

ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர்

கடந்த வழியைஎம் கண்ணாரக் காண

நடந்து சிதையாதி நீ.       42


பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை

வரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத்

தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்

ஆழியால் காணாமோ யாம்.       43


கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி

உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்

கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்

வண்டல் சிதைத்ததென் றேன்.       44


ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்

சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை

மாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோ

பூந்தண் பொழிலுள் குருகு.       45


ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்

பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்

கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி

தோள்நலம் தோற்பித்தல் நீ.       46


பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி

ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்

உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்

அணங்காகும் ஆற்ற எமக்கு.       47


எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த

நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப

மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்

ஒற்கம் கடைப்பிடியா தார்.       48


கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ

இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்

தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்

செய்தான் தெளியாக் குறி.       49


அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட

மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்

புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்

உள்ளுருகு நெஞ்சினேன் ஆய்.       50.


ஐந்திணை ஐம்பது முற்றிற்று

2. மூவாதியார் அருளிய ஐந்திணை எழுபது

(காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு)

கடவுள் வாழ்த்து

எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு

நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்

முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் நலஞ்சேர்

கண்டத்தான் ஈன்ற களிறு.


குறிஞ்சி


அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்

கவரி கடமா கதூஉம் படர்சாரல்

கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு)

யானிடை நின்ற புணை.       1


மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும்

குன்றன நாடன் தெளித்த தெளிவினை

நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி

ஒன்றுமற்(று) ஒன்றும் அனைத்து.       2


மன்றப் பலவின் களைவிளை தீம்பழம்

உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்(து)

ஆமா சுரக்கும் அணிமலை நாடனை

யாமாப் பிரிவ(து) இலம்.       3


சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி

வலியாகிப் பின்னும் பயக்கும் மெலிவில்

கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை

நயந்திகழும் என்னும்என் நெஞ்சு.       4


பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலை

நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு

நின்னல(து) இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்(து)

இன்னுயிர் தாங்கும் மருந்து.       5


காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள்

ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள்

தேன்கலந்து வந்த அருவி முடைந்தாடத்

தாம்சிவப் புற்றன கண்.       6


வெறிகமழ் தண்சுனைத் தண்ணீர் துளும்பக்

கறிவளர் தேமா நறுங்கணி வீழும்

வெறிகமழ் தண்சோலை நாட! ஒன்(று) உண்டோ

அறிவின்கண் நின்ற மடம்.       7


கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள்

வாழை முதுகாய் கடுவன் புதைத்தயரும்

தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழி

நேர்வனை நெஞ்(சு) ஊன்று கோல்.       8


பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்

கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும்

சுரும்(பு)இமிர் சோலை மலைநாடன் கேண்மை

பொருந்தினார்க்கு |ஏமாப்(பு) உடைத்து.       9


குறையொன்(று) உடையேன்மன் தோழி நிறையில்லா

மன்னுயிர்க்(கு) ஏமம் செயல்வேண்டும் இன்னே

அராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில்

இராவாரல் என்ப(து) உரை.       10


பிரைசங் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல்

மரையான் குழவி குளம்பில் துகைக்கும்

வரையக நாட! வரையால் வரின்எம்

நிரைதொடி வாழ்தல் இவள்.       11


வார்குரல் ஏனல் வளைலாயக் கிளைகவரும்

நீரால் தெளிதிகழ் காநாடன் கேண்மையே

ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும்

ஈர வலித்தான் மறி.       12


இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்

குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்

வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை

அலையும் அலைபோயிற்(று) இன்று.       13


கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்து

வானின் அருவி ததும்பக் கவினிய

நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும்

வாடல் மறந்தன தோள்.       14


முல்லை


செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்

பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்

காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்

நீரோ(டு) அலமரும் கண்.       15


தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார்

மடநடை மஞ்ஞை அகவக் - கடல்முகந்து

மின்னோடு வந்த(து) எழில்வானம் வந்தென்னை

என்னாதி என்பாரும் இல்.       16


தண்ணுறங் கோடல் துடுப்பெடுப்பக் காரெதிரி

விண்ணுயர் வானத்(து) உரும்உரற்றத் - திண்ணிதின்

புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை

கொல்லுநர் போல வரும்.       17


கதழுறை வானம் சிதற இதழ்அகத்துத்

தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅ

இடிப்பது போலும் எழில்வானம் நோக்கித்

துடிப்பது போலும் உயிர்.       18


ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம்

பீவி பரப்பி மயில்ஆலச் - சூலி

விரிகுவது போலும்இக் கார்அதிர ஆவி

உருகுவது போலும் எனக்கு.       19


இனத்த வருங்கலை பொங்கப் புனத்த

கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி

யானும் அவரும் வருந்தச் சிறுமாலை

தானும் புயலும் வரும்.       20


காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்

கார்கொடி முல்லை எயிறீனக் - காரோ(டு)

உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின்

மடம்பட்டு வாழ்கிற்பார் இல்.       21


கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக்

கன்றமர் ஆயம் புகுதா - இன்று

வழங்கிய வந்தன்று மாலையாம் காண

முழங்கிவில் கோலிற்று வான்.       22


தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்ப

ஆர்கலி வானம் பெயல்தொடங்கிக் - கார்கொள

இன்(று)ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர்

ஒன்றாலும் நில்லா வளை.       23


கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை

முல்லை தளவொடு போதவிழ - எல்லி

அலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்

முலைவற்று விட்டன்று நீர்.       24


25, 26 - இரண்டு பாடல்கள் மறைந்தவை


கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம்

ஆர்ப்போ(டு) இனவண்(டு) இமிர்ந்தாட - நீர்த்தின்றி

ஒன்றா(து) அலைக்கும் சிறுமாலை மாறுழந்து

நின்றாக நின்றது நீர்.       27


குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப

ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்!

பின்னொடு நின்று பெயரும் படுமழைகொல

என்னொடு பட்ட வகை.       28


பாலை


பொறிகிளர் சேவல் வரிமரல் குத்த

நெறிதூர் அருஞ்சுரம்நரம் உன்னி - அறிவிட்(டு)

அலர்மொழி சென்ற கொடியக நாட்ட

வலனுயர்ந்து தோன்றும் மலை.       29


ஒல்லோம்என்(று) ஏங்கி உயங்கி இருப்பாளோ

கல்லிவர் அத்தம் அரிபெய் சிலம்(பு)ஒலிப்பக்

கொல்களி(று) அன்னான்பின் செல்லுங்கொல் என்பேதை

மெல்விரல் சேப்ப நடந்து.       30


பொரிபுற ஓமைப் புகர்படு நீழல்

வரிநுகல் யானை பிடியோ(டு) உறங்கும்

எரிமயங்கு கானம் செலவுரைப்ப நில்லா

அரிமயங்கு உண்கண்ணுள் நீர்.       31


எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத்தொடை

அம்ஆ(று) அலைக்கும் சுரநிறைத்(து) அம்மா

பெருந்தரு தாளாண்மைக்(கு) ஏற்க அரும்பொருள்

ஆகும்அவர் காதல் அவா.       32


வில்லுழுது உண்பார் கடுகி அதரலைக்கும்

கல்சூழ் பதுக்கையார் அத்தத்தில் பாரார்கொல்

மெல்லியல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்(கு)இவர்ந்து

நில்லாத வுள்ளத் தவர்.       33


நீரல் அருஞ்சுரைத்(து) ஆமான் இனம்வழங்கும்

ஆரிடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய்!

நாணினை நீக்கி உயிரோ(டு) உடன்சென்று

காணப் புணர்ப்பதுகொல் நெஞ்சு.       34


பீரிவர் கூரை மறுமனைச் சேர்ந்(து) அல்கிக்

கூருகிர் எண்கின் இருங்கினை கண்படுக்கும்

நீரில் அருஞ்சுரம் உன்னி அறியார்கொல்

ஈரமில் நெஞ்சில் அவர்.       35


சூரல் புறவின் அணில்பிளிற்றும் சூழ்படப்பை

ஊர்கெழு சேவல் இதலொடு - போர்தினைக்கும்

|தேரொடு கானம் தெருளிலார் செல்வார்கொல்

ஊரிடு கவ்வை ஒழித்து.       36


கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி

கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டு

நெடுவரை அத்தம் இறப்பர்கொல் கோண்மாப்

படுபகை பார்க்குஞ் சுரம்.       37


கோளவல் கொடுவரி நல்வய மரக்குழுமும்

தாள்வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்

ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்றுணரா

மீளிகொள் மொய்ம்பி னவர்.       38


பேழ்வாய் இரும்புலி குஞ்சரம் கோட்பிழைத்துப்

பாழூர்ப் பொதியில் புகாப்பார்க்கும் ஆரிடைச்

சூழாப் பொருள்நசைக்கண் சென்றோர் அருள்நினைந்

வாழ்தியோ மற்றோ உயிர்.       39


முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை

புள்ளி வெருகுதன் குட்டிக்(கு) இரைபார்க்கும்

கள்ளர் வழங்கும் சுரமென்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி.       40


மன்ற முதுமரத்து ஆந்தை குரல்இயம்பக்

குன்றனம் கண்ணிக் குறும்(பு)இறந்து - சென்றவர்

கள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்(து)

ஒள்ளிய தும்மல் வரும்.       41


பூங்கணிடம் ஆடும் கனவும் திருந்தின

ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம்நினைப்ப

வீங்கிய மெள்தோள் கவினிப் பிணைதீரப்

பாங்கத்துப் பல்லி படும்.       42


மருதம்


பேதையர் என்று தமரைச் செறுபவோர்

போதுறழ் தாமரைக்கண் ஊரனை நேர்நோக்கி

வாய்முடி யிட்டும் இருப்பஏர் மாண்ழாய்!

நோவதென் மார்(பு)யுஅறிம் இன்று.       43


ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை

உள்ளம்கொண்(டு) உள்ளானென்(று) யார்க்குரைக்கோ - ஒள்ளிழாய்

அச்சுப் பணிமொழி உண்டேனோ மேனாள் ஓர்

பொய்ச்சூள் எனஅறியா தேன்.       44


ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்

மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்

கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேல்

பட்டஞ் சிதைப்ப வரும்.       45


அகன்பனை யூரனைத் தாமம் பிணித்த(து)

இகன்மை கருதி யிருப்பன் - முகன்அமரா

ஏதின் மகளிரை நோவ தெவன்கொலோ

பேதமை கண்டொழுகு வார்.       46


போத்தில் கழுத்தில் புதல்வன் உணச்சான்றான்

மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்

நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி

கூத்தாடி உண்ணினும் உண்.       47


யாணர்நல் லூரன் திறங்கிளப்பல் என்னுடை

பாண! இருக்க வதுகளை - நாணுடையான்

தன்னுற்ற எல்லாம் இருக்க இரும்பாண!

நின்உற்ற(து) உண்டேல் உரை.       48


உழலை முருக்கிய செந்நோக்(கு) எருமை

பழனம் படிந்துசெய் மாந்தி - நிழல்வதியும்

தண்டுறை யூரன் மலரன்ன மால்புறப்

பெண்டிர்க்(கு) உரைபாண! உய்த்து.       49


பேதை புகலை புதல்வன் துணைச்சான்றோன்

ஓதை மலிமகிழ்நற்(கு) யாஅம் எவன்செய்தும்

பூவார் குழற்கூந்தல் பொன்னன்னார் சேரியுள்

ஓவாது செல்பாண! நீ.       50


பொய்கைநல் லூரன் திறங்கிளத்தல் என்னுடைய

எவ்வம் எனினும் எழுந்தீக - வைகல்

மறுவில் பொலந்தொடி வீசும் அலற்றும்

சிறுவன் உடையேன் துணை.       51


உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும்

தண்டுறை யூர! தருவதோ? - ஒண்டொடியைப்

பாராய் மனைதுறந்(து) அச்சேரிச் செல்வதனை

ஊராண்மை யாக்கிக் கொளல்.       52


வளவயல் ஊரன் மருளுரைக்கு மாதர்

வளைகிய சக்கரத்(து) ஆழி - கொளைபிழையா

வென்றிடை யிட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்

ஒன்றி அனைத்தும் உளேன்.       53


உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்றென்(று)

எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்என்(று) - எண்ணி

வழிபாடு கொள்ளும் வயவயல் ஊரன்

பழிபாடு நின்மே லது.       54


காதலில் தீரக் கழிய முயங்கல்மின்

ஓதம் துவன்றும் ஒலிபுனல் ஊரனைப்

பேதைப்பட்(டு) ஏங்கல்மின் நீயிரும் எண்ணிலா

ஆசை ஒழிய வுரைத்து.       55


தேன்கமழ் பொய்கை அகவயல் ஊரனைப்

பூங்கண் புதல்வன் மிதித்துழக்க - ஈங்குத்

தளர்முலை பாராட்டி என்னுடைய பாவை

வளர்முலைக் கண்ஞமுக்கு வார்.       56


நெய்தல்


ஒழுகு நிரைக்கரை வான்குருகின் தூவி

உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப்

பேதையான் என்றுணரும் நெஞ்சும் இனி(து)உண்மை

ஊதியம் அன்றோ உயிர்க்கு.       57


என்னைகொல் தோழி! அவர்கண்ணும் நன்கில்லை

அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர்

புன்னையம் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ

நின்னல்ல(து) இல்லென்(று) உரை.       58


இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்

கடுமான் மணியவரம் என்று- கொடுங்குழை

புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர்

உள்ளரவம் நாணுவர் என்று.       59


மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்

அணிநலம் உண்டகன்றான் என்றுகொல் எம்போல்

திணிமணல் எக்கர்மேல் ஓதம் பெயரத்

துணிமுந்நீர் துஞ்சா தது.       60


கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்

தண்ணந் துறைவனோ தன்இலன் ஆயிழாய்!

வண்ணகைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப்

பண்ணமைத் தேர்மேல் வரும்.       61


எறிசுறாக் குப்பை இனங்கலக்கத் தாக்கும்

ஏறிதிரைச் சேர்ப்பன் கொடுமை - யறியாகொல்

கானகம் நண்ணி அருள்அற் றிடக்கண்டும்

கானலுள் வாழும் குருகு.       62.


நுண்ஞான் வலையில் பரதவர் போத்தந்த

பன்மீன் உணங்கல் கவரும் துறைவனைக்

கண்ணினாற் காண அமையுங்கொல் என்தோழி!

வண்ணந்தா என்கம் தொடுத்து.       63


சிறுமீன் கவுள்கொண்ட செந்தூவி நாராய்

இறுமென் குரலநின் பிள்ளைகட்கே யாகி

நெறிநீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற

நெறியறிதி மீன்தபு நீ.       64


தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரைமாந்திப்

பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணர்அன்றில்!

தண்ணந் துறைவற்(கு) உரையாய் மடமொழி

வண்ணம்தா என்று தொடுத்து.       65


அடும்பிவர் எக்கர் அலவன் வழங்கும்

கொடுங்கழிச் சேர்ப்பன் அருளான் எனத்தெளிந்து

கள்ள மனத்தான் அயல்நெறிச் செல்லுங்கொல்

நல்வளை சோர நடந்து.       66


கண்டதிரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப்

பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை

முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன்

நின்ற உணர்விலா தேன்.       67


இவர்திரை நீக்கியிட்(டு) எக்கர் மணன்மேல்

கவர்கால் அலவன் தனபெடை யோடு

நிகரில் இருங்கழிச் சேர்ப்ப! என்தோழி

படர்பசலை ஆயின்று தோள்.       68


69, 70 இரண்டு பாடல்களும் மறைந்தன.


ஐந்திணை எழுபது முற்றிற்று

கண்ணன் சேந்தனார் இயற்றிய திணை மொழி ஐம்பது

(காலம் கி. பி. நான்காம் நூற்றாண்டு)


1. குறிஞ்சி


புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்

புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்

வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா

யானை யுடைய கரம்.       1


கணமுகை கையெனக் காந்தள் கவின

மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்

விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ

புனமும் அடங்கின காப்பு.       2


ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்

பாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்

பூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா

ஈங்கு நெகிழ்ந்த வளை.       3


ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக்

கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்

வானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி

மேனி பசப்புக் கெட.       4


விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்

வரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர்

வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்

கல்லிடை வாழ்நர் எமர்.       5


யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்

கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்

|ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்

காணினும் காய்வர் எமர்.       6


யாழும் குழலும் முழவும் இயைந்தன

வீழும் அருவி விறன்மலை நன்னாட!

மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்

ஊரறி கெளவை தரும்.       7


வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்

வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்

சோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம்

போந்த(து)இல் ஐய! களிறு.       8


பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க

மணிமலை நாடன் வருவான்கொல் தோழ!

கணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும்

அணிநிற மாலைப் பொழுது.       9


பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்

எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்

புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னை

செலவுங் கடிந்தாள் புனத்து.       10


2, பாலை


கழுநீர் மலர்க்கண்ணாய்! கெளவையோ நிற்கப்

பொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்

அழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றி

வழிநீர் அறுத்த சுரம்.       11


முரிபரல வாகி முரணழிந்து தோன்றி

எரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர் !

அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்

தெரிவார்யார் தேரும் இடத்து.       12


ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்

மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்

கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்

பொலந்தொடீஇ பொய்த்த குயில்.       13


புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்

செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்

பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்

வருநசை பார்க்கும்என் நெஞ்சு.       14


சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்

நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி !

முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)

ஆர்பொருள் வேட்கை அவர்.       15


கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலர

இருஞ்சிறை வண்டினம் பாலை முரல

அரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல் மடவாய்

விரும்புநாம் செல்லும் இடம்.       16


கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்

வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்

எல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ

நல்கா துறந்த நமர்.       17


கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்

வெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்(கு)

எதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே

உதிர்வன போல உள.       18


கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்

நிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!

முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோ

வளையொடு சோரும்என் தோள்.       19


ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்

பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்

கூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள்

ஆற்றுங்கொல் ஐய நடந்து.       20


3. முல்லை


அஞ்சனக் காயா மலரக் குருகிலை

ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்

தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்

வந்தார் திகழ்நின் தோள்.       21


மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்(று) என்னாங்கொல்

நன்னுதல் மாதராய்! ஈதோ நமர்வருவர்

பல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்(து)

இன்னிறம் கொண்ட(து)இக் கார்.       22


சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிஃதோ

வெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்

தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து

இன்றையில் நாளை மிகும்.       23


செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீர்இஃதோ

வஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால்

வெஞ்சினம் பொங்கி இடித்(து)உரறிக் கார்வானம்

தண்பெயல் கான்ற புறவு.       24


கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்த

உருகு மடமான் பிணையோ(டு) உகளும்

உருவ முலையாய்! நம் காதலர் இன்னே

வருவர் வலிக்கும் போது.       25


இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலி

சுருங்கொடி முல்லை கவின முழங்கிப்

பெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார்

பொருந்த நமக்குரைத்த போழ்து.       26


ஆயர் இனம்பெயர்த்(து) ஆம்பல் அடைதாய்

பாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்து

மாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலை

செயவர் செய்த குறி.       27


அதிர்குரல் ஏறோ(டு) அலைகடல் மாந்தி

முதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக்

கதிர்மறை மாலை கனைபெயல் தாழப்

பிதிரும் முலைமேல் கணங்கு.       28


கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக்

காடெலாம் கார்செய்து முல்லை அரும்(பு)ஈன

ஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்!

போதராய் காண்பாம் புறவு.       29


அருளி அதிரக் குருகிலை பூப்பத்

தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற

வரிவனைத் தோளி! வருவார் நமர்கொல்

பெரிய மலர்ந்த(து)இக் கார்.       30


4. மருதம்


பழனம் படிந்த படுகோட்(டு) எருமை

கழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு)

உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்

கிழமை யுடையன்என் தோட்டு.       31


கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து)

இணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும்

பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன்

இணைத்தான் எமக்குமோர் நோய்.       32


கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!

உடைய இளநலம் உண்டாய் - கடைய

கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி

எதிர்நலம் ஏற்றுநின் றாய்.       33


செந்நெல் விளைவய லூரன் சிலபகல்

தன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண!

பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்

வாரிக்குப் புக்குநின் றாய்.       34


வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும்

கூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன்

மாணிழை நல்லார் இளநலம் உண்டவர்

மேனி ஒழிய விடும்.       35


செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர!

நொந்தான்மற்(று) உன்னைச் செயப்படுவ(து) என்னுண்டாம்

தந்தாயும் நீயே தரவந்த நன்னலம்

கொண்டாயும் நீஆயக் கால்.       36


பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கேள்

நெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள்

எல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போல

நல்லஅருள் நாட்டம்இ லேம்.       37


நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண!

சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீ

எல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்

சொல்லுமவர் வண்ணம் சோர்வு.       38


கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம்

பெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்

விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்

கரும்பின்கோ(து) ஆயினேம் யாம்.       39


ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும்

தீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும்

தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்

தாமரை தன்ஐயர் பூ.       40


5. நெய்தல்


நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்

கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்

செய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்!

ஐயகொல் ஆன்றார் தொடர்பு.       41


முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை

தத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப!

சித்திரப் பூங்கொடி அன்னாட்(கு) அருள்ஈயாய்

வித்தகப் பைம்பூணின் மார்பு.       42


எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ

நெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன்

அறிவுஅறா இன்சொல் அணியிழையாய்! நின்னில்

செறிவுஅறா செய்த குறி.       43


இளமீன் இருங்கழி ஓதம் உலாவ

மணிநீர் பரக்கும் துறைவ! தகுமோ

குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்

நினைநீர்மை இல்லா ஒழிவு.       44


கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம்

படமணி அல்குல் பரதர் மகளிர்

தொடலைசேர்த்(து) ஆடும் துறைவ! என்தோழி!

உடலுள் உறுநோய் உரைத்து.       45


முருகியல் கானல் அகன்கரை யாங்கண்

குருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்ப

மருவி வரலுற வேண்டும்என் தோழி

உருவழி உன்நோய் கெட.       46


அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான

மணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத்

துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!

தணியும்எள் மென்தோள் வளை.       47


கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்

பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப

வறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க

நிறங்கூரும் மாலை வரும்.       48


மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்

பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்

கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய

கண்ணின் வருந்தும்என் நெஞ்சு.       49


பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்

புகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும் முன்றில்

தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி

திகழும் திருஅமர் மார்பு.       50


திணை மொழி ஐம்பது முற்றிற்று

3. களவழி நாற்பது - பொய்கையார் இயற்றியது

(பாட வேறுபாடுகள் @, %, & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளன)


நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர்

வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து

முன்பசு@ லெல்லாங் குழம்பாகிப் பின்பகல்%

துப்புத் துகளிற் கெழூஉம் புனனாடான்

தப்பியா ரட்ட களத்து. 1

@முற்பகல் %பிற்பகல்


ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்

போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி

கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்

நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன்

ஆர்த்தம ரட்ட களத்து. 2


ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார்

இழுக்குங் களிற்றுக்கோ டூன்றி யெழுவர்@

மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடன்

பிழைத்தாரை யட்ட களத்து. 3

@ எழூஉம்


உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப்

பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற்

செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்

புல்லாரை யட்ட களத்து. 4


தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்

குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து

குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்

தப்பியா ரட்ட களத்து. 5


நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை

யடுக்குபு வேற்றிக் கிடந்த - இடித்துரறி

யங்கண் விசும்பி னுருமெறித் தெங்கும்

பெருமலை தூறெறிந்@ தற்றே யருமணிப்

பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன் தெவ்

வேந்தரை யட்ட களத்து. 6

@தூவெறிந்து


அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி

இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் - செங்கண்

வரிவரான் மீன்பிறழுங் காவிரி நாடன்

பொருநரை யட்ட களத்து. 7


யானைமேல் யானை நெரிதர வானாது

கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப @ - எவ்வாயும்

எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே

பண்ணா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்

நண்ணாரை யட்ட களத்து. 8

@ மெய்ம்மறைப்ப


மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட

காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல்

ஊணில் சுறபிறழ்வ @ போன்ற புனனாடன்

நேராரை யட்ட களத்து. 9

@இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ


பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா

தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற்

செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன்

தெவ்வரை யட்ட களத்து. 10


கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா ரிட்ட@

ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து

கண்காணா யானை யுதைப்ப விழுமென

மங்குன் மழையி னிதிரு மதிராப்போர்ச்

செங்கண்மா லட்ட களத்து. 11

@மைந்திழந்தாரிட்ட


ஒவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்

தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்

பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ

காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்

கூடாரை யட்ட களத்து. 12


நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்

வரைபுரை யானைக்கை நூற - வரைமேல்

உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற்

செஎய்பொரு தட்ட களத்து. 13


கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்@

பவளஞ் சொரிதரு பைபோற் றிவளொளிய%

வொண்செங் குருதி யுமிழும் புனனாடன்

கொங்கரை யட்ட களத்து. 14

@கைகடுணிக்க %திகழொளிய


கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்

புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்

வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்

சினமால் பொருத களத்து. 15


பரும வினமாக் கடவித் தெரிமறவர்

ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக்

குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும்

வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன்

வேந்தரை யட்ட களத்து. 16


ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித்

தாக்கி யெறிதா வீழ்தரு மொண்குருதி

கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் போன்றனவே@

ஆர்த்தம ரட்ட களத்து. 17

@விளக்குப்போன்றனவே


நளிந்த கடலுட் டிமிறிசை போலெங்கும்

விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து

தடற்றிடங் கொள்வாட்@ டளையவிழுந் தார்ச்சே(ய்)

உடற்றியா ரட்ட களத்து. 18

@ தடற்றிலங்கொள்வாள்


இடைமருப்பின்விட்டெறிந்தவெஃகங்கான்@ மூழ்திக்

கடைமணி காண்வரத் தோற்றி% - நடைமெலிந்து

முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன்

புக்கம ரட்ட களத்து. 19

@எஃகங்காழ் % தோன்றி


இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை

குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்@

சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன்

நேராரை யட்ட களத்து. 20

@தோற்றந்திரலிலா


இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து

கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த்

தொல்வலி யாற்றித்@ துளங்கினவாய் மெல்ல

நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட்

சினமால் பொருத களத்து. 21

@ தொல்வலியிற்றீர


இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்

ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள்

ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை

கோடுகொ ளொண்மதியை நக்கும்பரம் பொக்குமே

பாடா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்

கூடாரை யட்ட களத்து. 22


ஏற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து

நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு

செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே

கொற்றவேற் றானைக் கொடித்திண்டோ ர்ச் செம்பியன்

செற்றாரை யட்ட களத்து. 23


திண்டோ ண் மறவ ரெறியத் திசைதோறும்

பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும்

பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கேற்ற

கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன்

நண்ணாரை யட்ட களத்து. 24


மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்

குஞ்சரம் பாயக் கொடி யெழுந்து பொங்குபு

வானந் துடைப்பன போன்ற புனனாடன்

மேவாரை யட்ட களத்து. 25


எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட

கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்

ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ்

செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன்

தெவ்வாரை யட்ட களத்து. 26


செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால்

ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை

பூநீர் வியன்றமிடாப்@ போன்ற புனனாடன்

மேவாரை யட்ட களத்து. 27

@பூவியன்ற நீர்மிடா


ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப்

பீடுடை வாளார்@ பிறங்கிய ஞாட்பினுட்

கேடகத்தோ டற்ற தடக்கைகொண்% டோ டி

இகலன்வாய்த் துற்றிய& தோற்ற மயலார்க்குக்

கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன்

நண்ணாரை யட்ட களத்து. 28

@வாளர் % ஒரி இகலனயா & வாய்துற்றிய


கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபாட்டி

வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும்

கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட்

சினமால் பொருத களத்து. 29


மடங்க வெறிந்து மலையுருட்டு நீர்போல்

தடங்கொண்ட வொண்குருதி கொள்களி றீர்க்கு

மடங்கா மறமொய்ம்பிற்@ சினமால்

அடங்காரை யட்ட களத்து. 30

@ மடங்கள் மறமொய்ம்பின்


ஓடா மறவ ரெறிய நுதல்பிளந்த

கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை

மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன்

ஒன்னாரை யட்ட களத்து. 31


மையின்மா மேனி நிலமென்னு நல்லவள் [தீர்ந்த

செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்@ - பொய்

பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன்

காய்ந்தாரை யட்ட களத்து. 32

@ செவ்வென்றாள்


பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த வாயெல்லா

நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல்

ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே

கொய்சுவன் மாவிற் கொடித்திண்டோ ர் செம்பியன்

தெவ்வரை யட்ட களத்து. 33


இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர்

சுடரிலங் கெஃக மெறியச் சோர்ந் துக்க

குடர்கொண்டு@ வாங்குங் குறுநரி கந்தில்

தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட்

சேய்பொரு தட்ட களத்து. 34

@ குடர் கொடு


செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை

ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக்

கரைகொண் றிழிதரூஉம் காவிரி நாடன்

உரைசா லுடம்பிடி மூழ்க வரசோ(டு)

அரசுவா வீழ்ந்த களத்து. 35


ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே

காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்

மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா

ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன்

மேவாரை யட்ட களத்து. 36


அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு

முத்தடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும்

பெளவம் புணரம்பி போன்ற புனனாடன்

தெவ்வரை யட்ட களத்து. 37


பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து)

உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற்

பொன்னார மார்பிற் புனைசுழற்காற் செம்பியன்

துன்னாரை யட்ட களத்து. 38


மைந்துகால் யாத்து மயங்கிட ஞாட்பினுட்

புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை

பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்

வஞ்சிக்கோ வட்ட களத்து. 39


வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல்

எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற்

பணைமுழங்கு போர்த்தானைடச் செங்கட் சினமால்

கணைமாரி பெய்த களத்து. 40


வேனிறத் திங்க வயவரா லேறுண்டு

கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து

மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே

பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்

கூடாரை யட்ட களத்து.


களவழி நாற்பது முற்றிற்று


முதுமொழிக் காஞ்சி :மதுரைக் கூடலூர் கிழார் அருளியது

1. சிறந்த பத்து

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்

3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை

4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை

5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை

6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று

7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று

10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று

2. அறிவுப்பத்து

11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப

12. ஈரம் உடைமை ஈகையின் அறிப

13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப

14. கற்றது உடைமை காட்சியின் அறிப

15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப

16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப

17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப

18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப

19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப

20. சீருடை யாண்மை செய்கையின் அறிப

3. பழியாப் பத்து

21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

யாப்பி லோரை இயல்குணம் பழியார்

22. மீப்பி லோரை மீக்குணம் பழியார்

23. பெருமை உடையதன் அருமை பழியார்

24. அருமை யுடையதன் பெருமை பழியார்

25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்

26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்

27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்

28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்

29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்

30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.

4. துவ்வாப் பத்து

31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது

32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது

33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது

34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது

35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது

36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது

37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது

38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது

39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது

40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.

5. அல்ல பத்து

41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்

42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று

43. ஈரலில் லாதது கிளைநட் பன்று

44. சோராக் கையன் சொன்மலை யல்லன்

45. நேரா நெஞ்சத்தோன் நட்டோ ன் அல்லன்

46. நேராமற் கற்றது கல்வி யன்று

47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று

48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று

49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று

50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.

6. இல்லைப் பத்து

51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை

52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை

53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை

54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை

55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை

56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை

57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை

58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை

59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை

60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை

7. பொய்ப் பத்து

61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

பேரறவி னோன்இனிது வாழா மைபொய்

62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்

63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்

64. காலம்அறி யாதோன் கையுறல் பொய்

65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்

66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்

67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்

68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்

69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்

70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.

8. எளிய பத்து

71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது

72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது

73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது

74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது

75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது

76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது

77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது

78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது

79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது

80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது

9. நல்கூர்ந்த பத்து

81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று

82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று

83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று

84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று

85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று

86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று

87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று

88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று

89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று

90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.

10. தண்டாப் பத்து

91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்

92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்

93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்

94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்

95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்

96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்

97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்

98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்

99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்

100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.


No comments:

Post a Comment