Tuesday, 12 March 2024

ஐம்பெருங்காப்பியங்கள்(5 -3) சீவகசிந்தாமணி,, சிலப்பதிகாரம், வளையாபதி

 பெருங்காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணங்களோடு கவிஞர்களால் இயற்றப்பெறுவது. ஐம்பெருங்காப்பியங்கள் எனப்போற்றப்பெறுவன  

 சீவகசிந்தாமணி ,சிலப்பதிகாரம், வளையாபதி இதனை இயற்றியவர் ஜைனஅறவோரே மணிமேகலை, குண்டலகேசி இதனைஇயற்றியவர்  பெளத்தவர்கள்













வளையாபதி. nallathnar   A. D 2nd cent  available only 100 venpa 19ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த இவ்விலக்கியம் பின்னர் எப்படியோ அழிந்துவிட்டது. 

இதன் பிரதியைத் திருவாவடுதுறை ஆதினத்தில் பார்த்ததாக உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார். பின்னர் இதனைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு தேடியபோது, எங்கும் கிடைக்கப் பெறவில்லை என வருத்தத்துடன் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் குறிப்பிடுகிறார்.வளையாபதி காப்பிய ஆசிரியர் யார்? எப்போது இந்நூல் இயற்றப்பட்டது? காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதைதான் என்ன? இந்த வினாக்களுக்கு யாதொரு விடையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு நோக்குகிறபோது, இது ஒரு சமண சமய நூல் என்பது மட்டும் உறுதியாகிறது.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலானோர் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர். இந்நூற்பாடல்கள் அறுபத்து ஆறு புறத்திரட்டு நூலில் தொகுப்பட்டுள்ளன. எங்ஙனம், அங்ஙனம் என்ற சொற்கள் எங்ஙனே அங்ஙனே என்று வந்துள்ளன. “இவர் வளையாபதியை நினைத்தால்கவியழகு வேண்டி” எனத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் குறிப்பிடுகிறார். எனவே இந்நூல் கவியழகு மிக்கது என்பது தெரிய வருகிறது. இந்நூற் பாடல்கள் மொத்தம் எழுபத்தி இரண்டு கிடைத்துள்ளன நூலைப் போலவே நூலாசிரியர் யார்? அவர் எந்த ஊரைச் சார்ந்தவர்? எந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பதெல்லாம் அறியப்படவில்லை. நூற்பாடலைக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என யூகிக்கலாம். நூலாசிரியர் இலக்கிய ரசனையுடன் பாடல் புனையும் ஆற்றல் மிக்கவர். அறத்தில் சமண சமயக் கொள்கையில் ஆழ்ந்த பற்றும் பிடிப்பும் கொண்டவர் என்பது கிடைத்துள்ள பாடல்கள் வழி அறிய முடிகிறது.வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத ஒன்று. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டும் கூட இதன் கதையை அறிய முடியவில்லை.

1. வளையாபதியிற் கிடைத்துள்ள செய்யுள்கள்  கடவுள் வாழ்த்து

[இளம்பூரனர் தொல்காப்பிய உரையில் செய்யுளியல்:98-அம் நூற்பாவுக்கும், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் 37-ஆம் நூற்பாவுக்கும் எடுத்த நூற்பெயரைக் குறிப்பிடாமல் இதை மேற்கோளாகக் காட்டுகிறனர்; நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் செய்யுளியல் 148-ஆம் நூற்பாவின் உரையில் இதைக் காட்டி வளையாபதிச் செய்யுளென்று சொல்வதால் இது வளையாபதி என்று தெளிகிறது]

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் 

டிலக மாய திலறறி வனடி

வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்

தொழுவல் தொல்வினை நீங்குக என்(று)யான்.

உலகம் மூன்றும் - மூன்றுலகத்துள்ளும்

வாழும் சான்றோரனைவரும் ஒருங்கு உடன் ஏத்தும் - ஒருசேர

வாழ்த்தி வணங்குவதற்குக் காரணமான; மாண் திலகம் ஆய -

மாட்சிமை மிக்க திலகமாகத் திகழா நின்ற; திறல் அறிவன் -

ஆற்றன் மிக்க முற்றறிவினையுடைய அருகக் கடவுளின்; அடி -

திருவடிகளை தொலவினை நீங்குக என்று என்னுடை பழவினைகள்

துவரக்கெடுவனவாக என்று கருதியும்; யான் வழுவுஇல் நெஞ்சொடு

- யான் காம முதலிய குற்றங்களில்லாத தூய நெஞ்சத்தோடிருந்து;

வாலிதின் ஆற்றவும் - அதற்குக் காரணமான நோன்பினைத்

தூய்தாகப்பண்ணவும்; தொழுவல் - என் மன மொழி மெய்களாலே

தொழுது வழிபடுவேன் என்பதாம்.

(விளக்கம்) மூன்றுலகத்தும் வாழும் நல்லோர் ஒருங்கே

வாழ்த்தி வணங்குதற்குக் காரணமான பெருஞ் சிறப்புடைய அருகக்

கடவுளின் திருவடிகளை அடியேன் பழவினை கெடும் பொருட்டும்,

அவை கெடும் பொருட்டுக் குற்றத் தீர்த்த நன்னர்

நெஞ்சத்தோடிருந்து தூய்தாக அவன் கூறிய நல்லறங்களை

மேற்கொண்டொழுகவும் திருவருள் கூர்தல் வேண்டும் என்று

வணங்குகின்றேன் என்றவாறு.

மூன்றுலகம் என்பது மேலுலகும் நிலவுலகும் கீழுலகுமாம்,

இவற்றை ஒளியுலகம் நிலவுலகம் இருள் உலகம் என்ப, உலகம்

ஈண்டு உயி்ர்களின் மேற்று, என்னை? ஏத்துதற்குரியன

அவைகளேயாதலின் என்க,

இருள் உலகத்தாரும் அருகனை, வணங்குவரே என்னின்

வணங்குவர். என்னை? நரகவுலகமாகிய அதன்கண்

வீழ்ந்துழல்வோர்க்கும் அவனடிகளையன்றிக் களைகண்

பிறிதில்லையாகலின், அங்கும் நல்லறிவுபெற்று வணங்குவர் என்க,

நரகத்துழலும் உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தந்தீவினைக்

கிரங்கி அறமுதலியவற்றைச் செய்ய அவாவுவர் அன்பதனை,-

    நரகத்தே கிடந்து நலிவோர் கூற்றாக வருகின்ற,

        “தேடிப் பொருளைச் சிறுதோழிற்கே

               செலுத்தி யுணர்ச்சி தெரியாமல்

          பாடிப் பதருக் கிறைத்ததெல்லாம்

               பலித்த தெமக்கீங் கென்பர்சிலர்

          கேடிப் படிவந் தெமைச்சூழக்

               கெடுத்த பாவி யுலகிலின்ன

          நாடிப் பிறக்க விடினுமங்ங

               னுடோ மென்று சிலர்சொல்வார்”

எனவும்,

        “என்று மிறவோ மென்றிருந்தோ

               மிறந்து படுவ தீதறிந்தால்

          அன்று படைத்த பொருளையன்றே

               யருள்வோ மறையோர்க் கென்பர்சிலர்

          சென்று வரவாங் கெம்மையின்னஞ்

               செலுத்திற் புதைத்த திரவியத்தை

          யொன்று மொழியா தறம்புரிந்திங்

               கோடி வருவோ மென்பர்சிலர்”

எனவும்,

        “பிறந்த வுடனே துறந்துசுத்தப்

               பிரம முணர்ந்து பிறப்பதனை

          மறந்திந் நரகத் தெய்தாமை

               வருமோ நமக்கு மென்பர்சிலர்

          பிறந்து நிரையத் தழுந்தியிட

               ரிவ்வா றுழப்ப தறியாமற்

          சிறந்த விவேகர் பெருமான்நற்

               செயலைத் தவிர்ந்தோ மென்பர்சிலர்”

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் உணர்க,

இவ்வாறு தந்தீவினைக் கிரங்கு நரகர் அதன் தீர்வுகருதி

இறைவன் அடிகளை ஒருதலையாக ஏத்துவர் என்க,

திலகம் - நெற்றிச்சுட்டி, அறிஞர் தம் நெற்றியிலிடுதற்கியன்ற,

திலகம் போன்ற அடிகள் எனினுமாம், திறல் அறிவன் -

முற்றறிவினை உடைய இறைவன் ; இதனைக் ‘கேவலஞானம்’

என்பர். மூவுலகத்துமுள்ள உயிர் முதலிய பொருள்களின் முக்கால

நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் ஒருங்கே அறியும்

ஆற்றலுடைமையின் இறைவன் அறிவினைத் திறல் அறிவு என்றார்.

“உலகுணர் கடவுள்” அன்று திருத்தக்க தேவரும் (சீவக-2719)

“உலகம் மூன்று மொருங்குணர் கேவலத் தலகிலாத அநந்த குணக்

கடல்” என்று (கடவுள் வாழ்த்து) யசோதரகாவியமுடையாரும்

ஓதுதலுணர்க.

இனி, உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலகமாய

திறலறிவன் அடி என்று பொதுவி னோதியதன்றி அருகன்

என்னாமையின் அருகக் கடவுளின் அடிகள் என்றுரை

கூறியதென்னையோ? எனிற் (சமண சமயத்துப் பேராசிரியர் உரை

கூறுமாறு) கூறுதும் :-

உலகத்துச் சான்றோரால் வணங்கப்படுபவர்

இன்னாசெய்யாமையும், பொய் கூறாமையும், கள்ளாமையும்

காமமில்லாமையும் பற்றின்மையும் முதலாகிய குணங்கள்

உடையார் அல்லரோ. இக்குணங்கள் முழுதும் உடையான்

அருகக்கடவுளேயன்றி வேறு சமயக்கணக்கர் கூறும் இறைவர்க்

கெல்லாம் இக் குணங்களின்மையான் “உலகம் முன்றும் ஒருங்குடன்

ஏத்தும் மாண் திலகம் ஆய திறல் அறிவன் என்பது அருகக்

கடவுளுக்கே பொருந்துவதாயிற்று என்க.

இனி, இறைவன் அடிவணபகுதலின் குறிக்கோள், வழுவில்

நெஞ்சொடு வாலிதின் ஆற்றலே ஆதலின் அதனையே குறித்தார்.

வழுவில் நெஞ்சம் பெறுதற்கு இருள்சேர் இருவினையும் அகலுதல்

இன்றியமையாமையின் “தொல்வினை நீங்கவும்” என்றார்,

தொல்வினை நீங்க என்றும் எனல் வேண்டிய எண்ணும்மை

செய்யுள் விகாரத்தாற் றொக்கது.                    ( 1 )  

 




புறத் திரட்டில் தொகுக்கப் பட்ட 66 செய்யுள்கள் பின்வருமாறு:


1. வினைபல வலியி னாலே வேறுவே(று) யாக்கை யாகி

நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு

மனிதரின் அரிய(து) ஆகும் தோன்றுதல், தோன்றி னாலும்

இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம்.


2. உயர்குடி நனியுள் தோன்றல் ஊனமில் யாக்கை யாதல்

மயர்(வு)அறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்

பெரி(து)உணர் அறிவே யாதல் பேரறம் கோடல் என்றாங்(கு)

அரி(து)இவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார்.


3. நாடும் ஊரும் நனிபுகழ்ந்(து) ஏத்தலும்

பீ(டு)உ றும்மழை பெய்கெனப் பெய்தலும்

கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்

பாடு சால்மிகு பத்தினிக்(கு) ஆவதே.


4. பள்ள முதுநீர்ப் பழகினும் மீன்இனம்

வெள்ளம் புதியது காணின் விருப்(பு)உறூஉம்

கள்அவிழ் கோதையர் காமனொ(டு) ஆயினும்

உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ.


5. உண்டியுள் காப்(பு)உண்(டு) உறுபொருள் காப்புண்டு

கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு

பெண்டிரைக் காப்ப(து) இலமென்று ஞாலத்துக்

கண்டு மொழிந்தனர் கற்(று)அறிந் தோரே.


6. எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி

புற்பனி உக்க மரத்(து)இலை நுண்மயிர்

அத்துனை யும்பிறர் அஞ்சொலி னார்மனம்

புக்கனம் என்று பொதியறைப் பட்டார்.


7. தனிப்பெயல் தண்துளி தாமரை யின்மேல்

வளிப்பெறு மாத்திரை நின்றற்(று) ஒருவன்

அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்

துளக்கிலர் நில்லார் துணைவனைக் கையார்.


8. பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்

துறையிலா வசன வாவி துகிலிலாக் கோலத் தூய்மை

நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்

சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.


9. ஆக்கப் படுக்கும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும்;

போக்கப் படுக்கும்; புலைநகரத்(து) உய்ப்பிக்கும்;

காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்

நாக்(கு)அல்ல(து) இல்லை நனிபேணும் ஆறே.


10. தாரம் நல்லிதந் தாங்கித் தலைநின்மின்

ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை

வீர வென்றி விறல்மிகு விண்ணவர்

சீரின் ஏத்திச் சிறப்(பு)எதிர் கொள்பவே.


11. பெண்ணின் ஆகிய பேரஞர் பூமியுள்

எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்

பின்னி நின்ற பெருவினை மேல்வரும்

என்ன(து) ஆயினும் ஏதில்பெண் நீக்குமின்.


12. பொய்யன் மின்;புறம் கூறன்மின்; யாரையும்

வையன் மின்;வடி(வு) அல்லன சொல்லிநீர்

உய்யன் மின்;உயிர் கொன்(று)உண்டு வாழும்நாள்

செய்யன் மின்;சிறி யாரொடு தீயன்மின்.


13. கள்ளன் மின்,கள(வு) ஆயின யாவையும்;

கொள்ளன் மின்,கொலை கூடி வரும்அறம்;

எள்ளன் மின்,இலர் என்றெண்னி யாரையும்;

நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.


14. துற்றள வாகத் தொகுத்து விரல்வைத்த(து)

எற்றுக்(கு)அ·(து) என்னின் இதுவதன் காரணம்

அற்றமில் தானம் எனைப்பல ஆயினும்

துற்றவிழ் ஒவ்வாத் துணி(வு)என்னும் ஆறே.


15. ஆற்று மின்,அருள் ஆருயிர் மாட்டெலாம்;

தூற்று மின்னறந் தோம்நனி துன்னன்மின்

மாற்று மின்கழி மாயமும் மானமும்

போற்று மின்பொரு ளாஇவை கொண்டுநீர்.


16. பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா(து)

அருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்

அருளைப் பொருளா அறம்செய்து வான்கண்

இருளியல் பெய்தாத(து) என்னோ நமரங்காள்.


17. தகா(து)உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்

அவாவிலையின் உண்பான் புலால்பெருகல் வேண்டும்

புகாவலை விலங்காய்ப் பொருதுபிற ஊன்கொன்(று)

அவாவிலையில் விற்பானு மாண்டருகல் வேண்டும்.


18. பிறவிக் கடலகத்(து) ஆராய்ந்(து) உணரின்

தெறுவதிற் குற்றம் இல்லார்களும் இல்லை

அறவகை யோரா விடக்கு மிசைவோர்

குறை(வு)இன்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர்.


19. உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்(து) உண்ணன்மின்

செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்(து)ஒரீஇக்

கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு

மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர்.


20.பொருளடு போகம் புணர்தல் உறினும்

அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்

இருளில் கதிச்சென்(று) இனிஇவண் வாரீர்

தெருளுதல் உறினும் தெருண்மின் அதுவே.


21. தவத்தின் மேலுறை தவத்(து)இறை தனக்(கு)அல(து) அரிதே

மயக்கு நீங்குதல் மனமொழி யடுமெயிற் செறிதல்

உவத்தல் கய்தலொ(டு) இலாதுபல் வகைஉயிர்க்(கு) அருளை

நயத்து நீங்குதல் பொருள்தனை அனையதும் அறிநீ.


22. எண்ணின்றி யேதுணியும்; எவ்வழி யானும் ஓடும்;

உள்நின்(று) உருக்கும்; உரவோர்உரை கோடல் இன்றாம்

நண்ணின்றி யேயும்; நயவாரை நயந்து நிற்கும்;

கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும்.


23. சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்;

ஆன்(று)ஆங்(கு) அமைந்த குரவர்மொழி கோடல் ஈயார்;

வான்தாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன்

தாந்தாங்கி விட்ட கணைமெய்ப்படும் ஆயி னக்கால்.


24. மாஎன்(று) உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்;

யஎன்(று) எருக்கின் இணர்சுடுப; புன்மை கொண்டே

பேய்என்(று) எழுந்து பிறர்ஆர்ப்பவும் நிற்ப; காம

நோய்நன்(கு) எழுந்து நனிகாழ்க் கொள்வதாயி னக்கால்.


25. நக்கே விலாஇ றுவர்;நாணுவர்; நாணூம் வேண்டார்;

புக்கே கிடப்பர்; கனவும்நினை கையு மேற்பர்;

துற்றூண் மறப்பர்; அழுவர்;நனி துஞ்சல் இல்லார்;

நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்பம் ஆக்கும்.


26. அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி

அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்

புரிவலை முன்கைப் புனையிழை நல்லார்

விரகிலர் என்று விடுத்தனர் முன்னே.


27. பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்

வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக்

கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்(து)

ஓடல் இன்றி உலையக் குறைக்குமே.


28. பொய்யின் நீங்குமின்; பொய்யின்மை பூண்டுகொண்(டு)

ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்;

வைகல் வேதனை வந்(து)உறல் ஒன்(று)இன்றிக்

கௌவை இல்உல(கு) எய்துதல் கண்டதே.


29. கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்

நல்லில் செல்லல்க ளால்நலி(வு) உண்மையும்

பொய்யில் பொய்யடு கூடுதற்(கு) ஆகுதல்

ஐயம் இல்லை அதுகடிந்(து) ஓம்புமின்.


30. உல(கு)உடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின்

நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும்

அலகில்துயர் அஞ்சின்உயிர் அஞ்சவரும் வஞ்சக்

கொலைஒழிமின் என்றுநனி கூறினர் அறிந்தார்.


31. வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்

கள்வர்என்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்

உள்ளில் உறுபொருளை ஒட்டா(து) ஒழிந்தவர்

எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வ மிகப்பவே.


32. ஒழிந்த பிறவறன் உண்டென்பார் உட்க

அழிந்து பிறரவாம் வம்பப் பொருளை

இழந்து சிறிதானும் எய்தா(து) ஒழிந்தார்

அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப் பிலரே.


33. இன்மை இளிவாம் உடைமை உயிர்க்(கு)அச்சம்

மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்

புன்மை உறுக்கும் புரையில் அரும்பொருளைத்

துன்னா(து) ஒழிந்தார் துறவோ விழுமிதே.


34. ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி

நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்

மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை

வேண்டா(து) ஒழிந்தார் விறலோ விழுமிதே.


35. இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்

கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்

இல்லையுண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்

புல்லென்று காட்டும் புணர்வது மன்றே.


36. வேற்கண் மடவார் விழை(வு)ஒழிய யாம்விழையக்

கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற்(று) உழையதா

நாற்ப(து) இகந்தாம் நரைத்தூதும் வந்த(து)இனி

நீத்தல் துணிவாம் நிலையா(து) இளமையே.


37. இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல

வளமையும் அ·தேயால் வைகலும் துன்பவெள்ளம்

உளவென நினையாதே செல்கதிக்(கு) என்றும்என்றும்

விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.


38. மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொல் பிறப்(பு)அறுக்கல்

உற்றார்க்(கு) உடம்பு மிகையவை உள்வழிப்

பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்

அற்றாய் உழலு மறுத்தற் கரிதே.



39. உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை

மற்றது தோய்த்துக் கழுவுதல் என்னொக்கும்

பற்றினான் ஆகிய பாவத்தை மீட்டும்

பற்றொடு நின்று பறைக்(கு)உறும் ஆறே.


40. தானம் செய்திலம் தவமும் அன்னதே

கானம் தோய்நில விற்கழி வெய்தினம்

நானம் தோய்குழல் நமக்(கு)உய்தல் உண்டோ

மானம்தீர் கொள்கையார் மாற்றம்பொய் அல்லவால்.


41. பருவந்து சாலப் பலர்கொல்என்(று) எண்ணி

ஒருவந்தம் உள்ளத்(து) உவத்தல் ஒழிமின்

வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்

ஒருவன் உலகிற்(கு) உளன்என்னும் ஆறே.


42. உய்த்தொன்றி யேர்தந் துழவுழுது ஆற்றவும்

வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்னொக்கும்

யுய்த்தவம் இல்லான் பொருளடு போகங்கட்

கெய்த்துழந் தேதான் இடர்ப்படு மாறே.


43. செந்நெலங் கரும்பினொ(டு) இகலும் தீஞ்சுவைக்

கன்னலம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்

இன்னவை காண்கிலன் என்று பூகமும்

முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே.


44. குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்

அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்

நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்

புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ.


45. கெட்டேம் இதுவெந் நிலையென்று சார்தற்கண்

நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்

பெட்டது சொல்லிப் பெரி(து)இகழ்ந்(து) ஆற்றவும்

எட்டவந் தோர்இடத்(து) ஏகிநிற்பவே.


46. தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட

எண்ணெய்கொண்(டு) ஈட்டற்(கு) இவறுதல் என்ஒக்கும்

பெண்மனம் பேதித்(து) ஒருப்படுப்பென் என்னும்

எண்ணில் ஒருவன் இயல்(பு)எண்ணும் ஆறே.


47. நீண்முகை கையாற் கிழித்தது மொக்குறு

மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற்

பேணலும் அன்பும் பிறந்(து)உழிப் பேதுசெய்(து)

ஆணைப்பெண் ணைய வணைக்குறு மாறே.


48. அந்தகன் அந்தகற்(கு) ஆறு சொலல்ஒக்கும்

முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்

நன்(கு)அறி(வு) இல்லான் அதுவறி யாதவற்(கு)

இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே.


49. யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப்

பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று

கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை

வேறோர் இடத்து வெளிப்பட நன்றாம்.


50. ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று

பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்

மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி

யாரவர் அடைந்தவர்க் கவையும் புரைப.


51. வாரி பெருகப் பெருகிய காதலை

வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்

மாரி பெருகப் பெருகி அறவறும்

வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.


52. எங்ஙனம் ஆகிய(து) இப்பொருள் அப்பொருட்(கு)

அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்

எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்(கு)

அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.


53. கரணம் பலசெய்து கையுற்(று) அவர்கட்

கரண மெனுமிலர் ஆற்றிற் கலந்து

திரணி உபாயத்திற் றிரண்பொருள் கோடற்

கரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப.


54. நாடொறும் நாடொறும் நந்திய காதலை

நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்

நாடொறும் நாடொறும் நந்தி உயர்(வு)எய்தி

நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப.


55. வனப்பிலர் ஆயினும் வன்மையி லோரை

நினைத்தவர் மேவர நிற்பமைக் காவர்தாம்

கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்

புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப,


56. தங்கண் பிறந்த கழிஅன்பி னார்களை

வண்கண்மை செய்து வலிய விடுதலின்

இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்(கு)

அங்கண் பரப்பகத் தாழ்கல மொப்ப.


57. ஒத்த பொருளான் உறுதிசெய் வார்களை

எத்திறத் தானும் வழிபட்(டு) ஒழுகலின்

பைத்தர அல்குல்பொற் பாவையி னல்லவர்

பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.


58. வீபொரு ளனை அகன்று பிறனுமோர்

மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்

மேய்புலம் புல்லற மற்றோற் புலம்புகு

மாவும் புரைப மலரன்ன கண்ணார்.


59. நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்

நன்குடை யானை நயந்தனர் கோடலின்

வம்பிள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்

கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.


60. முருக்(கு)அலர் போற்சிவந்(து) ஒள்ளிய ரேனும்

பருக்கர டில்லவர் பக்கம் நினையார்

அருப்பிள மென்முலை அம்சொ லவர்தாம்

வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.


61. மக்க்ள் பயந்து மனையறம் ஆற்றுதல்

தக்க(து) அறிந்தார் தலைமைக் குணமென்ப

பைத்(து)அர(வு) அல்குல் படிற்(று)உரை யாரொடு

துய்த்துக் கழிப்பது தோற்றமொன்(று) இன்றே.


62. நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்

பகைநனி தீது பணிந்தீ யாரோடும்

இவைமிகு பொருளென்(று) இறத்தல் இலரே

வகைமிகு வானுல(கு) எய்திவாழ் பவரே.


63. பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது

கொண்ட விரகர் குறிப்பினின் அ·குப

வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்

மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.


64. சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்

நல்லவை யாரும் நன்மதிப் பாரல்லர்

கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய

புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ.


65. தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்

பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப

விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்

பழுமரம் வீழ்ந்த பறவையின் போப.


66. பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்

அருள்இல் அறனும் அமைச்(சு)இல் அரசும்

இருளினுள் இட்ட இருண்மையி தென்றே

மருள்இல் புலவர் மனம்கொண்(டு) உரைப்ப.


சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக வருவன:


67.

[சிலம்பு: கனாத்திறம்: 13-க்கு]


துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய

நிக்கந்த வேடத்(து) இருடி கணங்களை

ஒக்க அடிவீழ்ந்(து) உலகியல் செய்தபின்

அக்கதை யாழ்கொண்(டு) அமைவரப் பண்ணி.


68. [சிலம்பு: கனாத்திறம்: 14-க்கு]


பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட

தொண்ணூற்(று) அறுவகைக் கோவையும் வல்லவன்

விண்ணா(று) இயங்கும் விறலவர் ஆயினும்

கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.


69. [சிலம்பு: ஆய்ச்சியர்குரவை: 3-க்கு]


அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற்

கன்றின் குரலும் கறவை மணிகறங்கக்

கொன்றைப் பழக்குழற் கோவலர் ஆம்பலு

மொன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்.


யாப்பருங்கல உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டுவன:

[யாப்பருங் கலம்: 93-ஆம் நூற்பாவிற்கு]

70. நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து

கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே

கோலம் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்

காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே

காலக் கனலெரியின் வேவன கண்டாலும்

சால மயங்குவ(து) என்வாழி நெஞ்சே.

71. வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்

மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே

மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே

உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே

உத்தம நன்னெறிக்கண் நின்(று)ஊக்கஞ் செய்தியேற்

சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.

வளையாபதியிற் கிட்டியுள்ள செய்யுள்களின் தொகை முற்றிற்று


No comments:

Post a Comment